ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை: வானிலை அறிக்கை

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்உம் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

 பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (27.01.2023) காலை 0530 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. 

இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 31.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01.02.2023 இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக, நாளை மறுநாள், அதாவது 29.01.2023 அன்று வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 30.01.2023 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 

31.01.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

29.01.2023 அன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

30.01.2023: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

31.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.