ஹைதராபாத்: குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் கலந்து கொண்டனர்.
தெலங்கானாவில் ஆளுநருக்கும் – மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. குடியரசு தின விழாவிலும் இந்த மோதல் எதிரொலித்தது.
கரோனாவை காரணம் காட்டி, இந்த ஆண்டும் குடியரசு தின விழா ரத்து செய்யப்படுவதாக தெலங்கானா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து ஸ்ரீநிவாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், குடியரசு தின விழாவை நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டது. ஆனால், நேரமின்மை காரணமாக பயிற்சி மைதானத்தில் குடியரசுதின விழாவை நடத்த இயலவில்லை என தெலங்கானா அரசு கூறிவிட்டது.
வேறு வழியின்றி ராஜ்பவனில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தெலங்கானா அரசு சார்பில் தலைமை செயலாளரும், டிஜிபியும் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேசிய கொடியேற்றி, உரையாற்றினார். அந்த உரையைகூட தெலங்கானா அரசு தயாரித்து கொடுக்கவில்லை.
ஆளுநர் பேசும்போது மறைமுகமாக தெலங்கானா முதல்வரை குற்றம் சாட்டினார். “புதிய கட்டிடங்கள் கட்டினால் போதாது, ஏழை,எளிய மக்கள் வாழ இலவச வீட்டுமனை, வீடு போன்றவற்றையும் கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றுஅவர் கூறினார். ரூ.650 கோடியில்கட்டப்பட்ட தலைமை செயலகத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி ஆளுநர் தமிழிசை இவ்வாறு பேசினார்.
அடிக்கடி பண்ணை வீட்டுக்குசென்று முதல்வர் ஓய்வெடுப்பதையும் ஆளுநர் குற்றம் சாட்டினார். “பண்ணை வீட்டில் ஓய்வெடுத்தால் மட்டும் போதாது, விவசாயிகளுக்கு அவர்களது பண்ணையில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
“அரசுக்கு என்னை பிடிக்காவிட்டாலும், தெலங்கானா மக்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்” என தெலுங்கிலேயே பேசி அசத்தினார் ஆளுநர் தமிழிசை.
இதுகுறித்து முதல்வர் சந்திரசேகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, “மாநில முதல்வரை, ஆளுநர் மோசமாக விமர்சித்து உள்ளார். இது குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிப்போம்” என்று தெரிவித்தன.
தெலங்கானா பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் கூறும்போது, “ஒரு பெண் என்றும் பாராமல் ஆளுநருக்கு சிறிதளவும் மரியாதை கொடுக்காத வகையில் முதல்வர் சந்திரசேகர ராவ் நடந்து கொள்கிறார். தேசிய கட்சியை தொடங்கி அவர் நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்” என்று கேள்வி எழுப்பினார்.