கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62-வயதான கிறிஸ்டோபர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேர பணியாக செய்துவந்தார். பருத்திவிளையில் உள்ள தன் குடும்ப வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். பின்னர் தனியாக குடும்ப வீட்டில் வசித்துவந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற 45 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி இந்தோனேசிய பெண் திபோரா-வை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் கிறிஸ்டோபர்.
கிறிஸ்டோபரின் காலம் கடந்த திருமணத்திற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கிறிஸ்டோபர் உணவு வாங்குவதற்காக ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கிறிஸ்டோபரின் உறவினர்கள் இந்தோனேசியா பெண் திபோரா-வை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்துள்ளனர். ஓட்டலுக்குச். சென்றுவிட்டு திரும்பிய கிறிஸ்டோபரை வீட்டிற்குள் விடாமல் கேட்டையும் இழுத்து மூடியுள்ளனர். தனது மனைவியை உறவினர்கள் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு தன்னை வீட்டுக்குள் போகவிடாமல் வெளியேற்றி விட்டதாகவும், மனைவியின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றுமாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் கிறிஸ்டோபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் இந்தோனேசிய பெண் திபோரா-வை வீட்டைவிட்டு வெளியே விட மறுத்ததுடன், கிறிஸ்டோபரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிறிஸ்டோபரின் உறவினர்கள் உடன்படாததால் போலீஸார் பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்வோம் என எச்சரித்தனர். இதையடுத்து உறவினர்கள் கேட் மற்றும் வீட்டை திறந்தனர். பின்னர் இரு தரப்பையும் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிறிஸ்டோபர் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் தெரிவித்தனர். அதே சமயம், `நான் இனி திருமணம் செய்துகொள்ளமாட்டேன், எனது வீடு மற்றும் சொத்துக்களை பங்கிட்டுக்கொள்ளலாம் என உறவினர்கள் நினைத்தார்கள். சொத்து கிடைக்காது என்பதால் தனது திருமணத்தை உறவினர்கள் எதிர்க்கிறார்கள்’ என கிறிஸ்டோபர் தெரிவித்திருக்கிறார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என போலீஸ் தரப்பில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். 62 வயது போதகர், 45 வயது இந்தோனேஷியா பெண்ணை திருமணம் செய்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.