திறமையான பந்து வீச்சாளர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டம் – அஸ்வின் தொடங்கி வைத்தார்

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இருக்கும் சிறந்த மித வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்து சர்வதேச வீரர்களாக உருவெடுக்க வைக்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் முதல் தர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து அதன் மூலம் திறமையான வீரர்களை அடையாளம் காணுவதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் சிறப்பு தேர்வு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. சிறந்த இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை பட்டை தீட்டும் இந்த திட்டத்தை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் காணுவதற்கான சிறப்பு தேர்வு முகாம் 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. 14 மற்றும் 24 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளாக எந்த வயது பிரிவிலும் ஒருங்கிணைந்த மாவட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கக்கூடாது.

சென்னையை தவிர தேனி, திருப்பூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சேட்டிலைட் மையங்கள் உருவாக்கப்படுகிறது. இதில் தேனி, திருப்பூர் ஆகியவை அதிக திறன் கொண்ட சேட்டிலைட் மையங்களாக இருக்கும். ஏற்கனவே உள்ள நெல்லை, நத்தம், சேலம், கோவை டி.என்.பி.எல். லீக் மைதானங்களில் உள்ள வசதிகள் மற்றும் விழுப்புரம் மைதானத்ததில் உள்ள வசதியும் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். அடையாளம் காணப்படும் சிறந்த பந்து வீச்சாளரை சர்வதேச போட்டியில் ஆடும் அளவுக்கு அவரது திறமையை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும். ஏழ்மை நிலையில் உள்ள வீரர்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு உதவி தொகை வழங்க ஸ்பான்சர் ஏற்பாடு செய்யப்படும்.

தமிழக அணி கடைசியாக 1988-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்றது. அதன் பிறகு இதுவரை கோப்பையை வெல்லவில்லை. அந்த குறையை போக்க வேண்டும். நானும் இந்த திட்டத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், இணை செயலாளர் சிவக்குமார், உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, துணைத்தலைவர் ஆடம் சேட், கிரிக்கெட் திறன் கமிட்டி சேர்மன் சுப்பையா, முன்னாள் ரஞ்சி வீரர் கல்யாண சுந்தரம், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி சேர்மன் கிரீஷ், கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பந்து வீச்சாளர்களை கண்டறியும் தேர்வு முகாம் பிப்ரவரி 11-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.