பழனி முருகன் கோவில் குடமுழுக்கு காரணமாக, பழனி நகரில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை செய்து வருகின்றது.
இன்று காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாத விநாயகர் கோயில், இடும்பன் கோயில், கடம்பன் கோவில், குமார வடிவேலர் கோவில், அகஸ்தியர் கோயில், வள்ளிநாயகி கோயில், இரட்டை விநாயகர் கோயில் சண்டிகா தேவி மற்றும் ஐந்து மயில்கள் உட்பட 12 உப கோவில்களுக்கு முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு நடைபெறும் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை இறைச்சி கடைகளை மூட நகராட்சி ஆணையர் கமலா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உத்தரவை மீறி யாரேனும் இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.