`பஞ்சமி நிலத்தை கார்ப்பரேட்டுக்கு கொடுக்கிறார்கள்’-கிராம சபையை புறக்கணித்து போராடிய மக்கள்

அளவந்தான்குளம் கிராம மக்களுக்குச் சொந்தமான 350 ஏக்கர் பஞ்சமி நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க இருக்கும் முடிவை எதிர்த்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள், போஸ்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் அளவந்தான்குளம் கிராமத்தில் வாழும் அரிஜன ஏர் உழவர் சமுதாய மக்களுக்கு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் 350 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 350 ஏக்கரை ஒரு லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றி அம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஞ்சமி நிலத்தில் பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து, அளவந்தான்குளம் ஆகிய 3 கிராமத்திற்கான நீராதார கிணறுகளும் உள்ளது.
image
இந்த நிலையில் கங்கைகொண்டான் சிப்காட்டில் புதிதாக தொடங்கவுள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்காக இந்த 1,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 350 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களும் கையகப்படுத்துவதாக மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பல்லிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அளவந்தான்குளம், நெல்லை திருத்து, பள்ளிக்கோட்டை ஆகிய 3 கிராமங்களிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மொத்தமாக ஒரு லட்சம் கால்நடைகளின் வாழ்வாதாரமாக 350 ஏக்கர் மேய்ச்சல் நிலம் உள்ளது.
அப்படியிருக்கையில், இந்த நிலத்தை அரசு சிப்காட் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகையில், ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தொழிலை அழிக்கப்படும் என மக்கள் அஞ்சினர். இக்காரணத்திற்காக அவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
தொடர்புடைய செய்தி: `எங்க பஞ்சமி நிலம்தான் கிடைச்சதா?’- சிப்காட் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
இந்நிலையில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு அளவந்தான்குளம் கிராமத்தில் நான்கு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராம சபை கூட்டம் நடைபெற இருந்தது. அப்போது, `கிராம மக்களின் மேய்ச்சல் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ எனக்கூறி அளவந்தான்குளம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறினர்.
image
இதையடுத்து கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிய கிராம மக்கள், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் போஸ்டர்களை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.