பழனி முருகனுக்கு கும்பாபிஷேகம்
தமிழ் கடவுள் முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் குட முழுக்கு விழாவுக்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்படவுள்ளது. அப்போது, ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நீரை பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் செய்யப்படுள்ளன.
தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் விடிய விடிய கோலாகலகமாக நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் தெளிக்கும் விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். இதனையொட்டி அங்கு அடிப்படை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழனியில் விழாக்கோலம்
மற்றவர்கள் கும்பாபிஷேகத்தையும், முருகனையும் காண பழனி பேருந்து நிலையம் உள்ளிட்ட 16 இடங்களில் மிகப்பெரிய எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா பணிகள் நிறைவடைந்ததும் பகல் 11 மணிக்குப் பிறகு அனைத்து பக்தர்களும் வழக்கம்போல் முருகனை வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பழனி நகர் முழுவதும் வாழை மரங்கள், பூக்கள் தோரணம், வண்ண விளக்குகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2000 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் பிரசாதம்
பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.250 செலுத்தி பழனி பஞ்சாமிர்தம், சாமி படம், பிரசாதம் (திருநீர்) பெற்று கொள்ளலாம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தலைமை தபால் நிலையம் மற்றும் துணை அஞ்சலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பழனி முருகன் கோயிலுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.