பாஜக அழைத்தால் முடிவெடுக்க டிடிவி தினகரன் தயார்: இரட்டை இலை கிடைப்பதில் சிக்கலா?

அதிமுக உட்கட்சி மோதல் வலுப்பெற்று ஆளுக்கொரு திசையாக பிரிந்து நிற்பதற்கு பாஜகவே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை தன்னை அழைத்தால் அப்போது அது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் தனது கட்சியின் சின்னமான குக்கர் சின்னத்தை காட்டி வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவுக்கு ஒருவேளை இரட்டை இலை கிடைக்காமல் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் அதை பயன்படுத்தி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துவிடலாம் என்ற கணக்கும் அக்கட்சி தலைமையிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “இப்போது உள்ள நடைமுறையை பார்த்தால் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை. அதிமுக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி மேலிடம் தான் காரணம். மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன்” என்றார்.

“பாஜக வளர்ந்து வருகிறது என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி வளர்வது மக்களின் கையில் தான் உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரசுடன் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். அதனால் தான் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்டார். தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.