மத்திய அரசு தடை செய்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படத்தைப் பார்த்த சென்னை பெண் கவுன்சிலர் உள்ளிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ளது. இதுவரை 2 பாகங்களை வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் அனுமதி மறுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சியில் இடதுசாரி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (ஜன. 26), சென்னை அண்ணாநகர் டி.பி.சத்திரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்று கூடி மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாநகராட்சியின் 98வது வார்டு சிபிஐ (எம்) கவுன்சிலர் பிரியதர்ஷினியும் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி குறித்து பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தையும் பார்த்தனர். இதையடுத்து, தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தை பார்த்ததற்காக கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.