புதுடெல்லி: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக ‘மிஷன் 2024’ என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. இதில், முஸ்லிம் வாக்குகளுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை பிடித்தது. 2019 தேர்தலிலும் தொடர்ந்த மோடி அலையால் கூடுதல் தொகுதிகள் கிடைத்தன. இதைவிட அதிக தொகுதிகள் பெற்று வரும் 2024-ல்பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கபாஜக வியூகம் வகுத்துள்ளது. ‘மிஷன் 2024’ என்ற பெயரிலான இந்த திட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் முஸ்லிம் வாக்குகளை பெற பாஜக முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தலில் முஸ்லிம்களை கவர, முதன்முறையாக தனது ஹைதராபாத் நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக அறிவிப்பு வெளியிட்டது. இதை டெல்லியில் கடந்த ஜனவரி 16, 17-ல் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் எடுத்துரைத்தார். பாஜகவின் திட்டப்படி முஸ்லிம்கள் வாழும்அனைத்து பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று முஸ்லிம்களை சந்திக்க உள்ளனர். அப்போது எதிர்க்கட்சிகளால் பாஜக மீது கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புவாதத்தை முறியடிப்பதை அவர்களின் முதல் கடமையாக்கி உள்ளது.
இதற்காக, பாஜக நிர்வாகிகள் நாடு முழுவதிலும் முஸ்லிம்களிடம் சென்று, மத்திய அரசின் நலத் திட்டங்களை எடுத்துரைக்க உள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியாத முஸ்லிம்களுக்கு அவற்றை முன்னின்று பெற்றுத்தர உள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமுள்ள உ.பி.யில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பாஸ்மந்தா எனும் முஸ்லிம் கைவினைத் தொழில் சமூகத்தினர் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவர்களிடையே, நட்பு யாத்திரை, ஸ்கூட்டி யாத்திரை என ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக சிறுபான்மையினர் பிரிவு வட்டாரம் கூறும்போது, “பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு இதர கட்சிகளை போல் தற்போது வலுப்பெற்றுள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 60 மக்களவை தொகுதிகளை அடையாளம் கண்டு அதன் பொறுப்புகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உ.பி. மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 13 தொகுதிகள் உள்ளன. கேரளா மற்றும் அசாமில் தலா 6, ஜம்மு-காஷ்மீரில் 6, பிஹாரில் 4, மத்தியபிரதேசத்தில் 3 என தொகுதிகள் உள்ளன. தமிழகம் மற்றும் ஹரியாணாவில் தலா 2, மகராஷ்டிரா மற்றும் லட்சத்தீவில் தலா 1 எனவும் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இனி பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தனர்.
பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகளால், முஸ்லிம்கள் உடனடியாக தங்கள் வாக்குகளை அள்ளி கொடுப்பது கடினம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் தங்கள் வாக்குகளை மட்டும் பெறும் பாஜக முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளிப்பதில்லை. சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தேர்தல்களில் பல ஆண்டுகளாக இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த நிலை தொடர்கிறது. முஸ்லிம் வாக்குகள் அதிகமுள்ள பலதொகுதிகளில் தம்மால் வெற்றிபெற முடியாது என பாஜக உணர்ந்திருப்பதே இதற்கு காரணம்.
பாஜக ஆளும் உ.பி.யில் பெருமளவில் முஸ்லிம்கள் உள்ளனர். எனினும் அங்கு ஒரே முஸ்லிம் அமைச்சரான தானிஷ் ஆசாத் அன்சாரி எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக தேர்வாகி உள்ளார். எனவே முஸ்லிம் தொகுதிகளில்தமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை உயர்த்திக்கொள்ள பாஜக விரும்புகிறது.