மும்பை நகரத்தில் கொரோனா பாதிப்பு, பதிவு செய்யப்படாத நாள்

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்தியாவின் மும்பை நகரத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 24) நிலவரப்படி ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு நேற்றைய தினத்தை (ஜனவரி 25) பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதி மூலதனமாக திகழும் மும்பை நகரை கொரோனா தொற்று வாட்டிவதைத்தது. அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னொரு அலை ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாதிப்பு நகரின் மொத்த கொரோனா எண்ணிக்கையை 11,55,240ஆக உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கையில் மாற்றமின்றி 19,747ஆக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மூன்று அதிகரித்து 11,35,462-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், கொரோனா வைரஸில் இருந்து மீட்பு விகிதம் 98.3 சதவீதமாக உள்ளது. இதுவரை 1,86,93,408 கொரோனா பரிசோதனைகள் மும்பையில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 547ஆக உள்ளது எனவும், தற்போது 1,922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மறுபுறம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,737.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மலேசியா மற்றும் ஓமனில் இருந்து வந்த 2 பேர் உள்பட 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 33 மாவட்டங்களில் பாதிப்பு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.