பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோரத்னம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
தற்பொழுது சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சண்டை பயிற்சியாளர் ஜீடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், மனோபாலா, கார்த்தி, ராதாரவி என பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்துடன் பல படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம் உடலுக்கு நேரில் மாலை அணிவித்த ரஜினி, பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், ”1976ம் ஆண்டில் இருந்து ஜூடோ ரத்னம் அவர்களை பழக்கம் ஏற்பட்டது. அவருக்கென்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார் அவர். அவருடைய உதவியாளர்கள் இன்று பெரிய ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார்கள். ‘முரட்டு காளை’ திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சி போல இதுவரை யாரும் செய்தது இல்லை. அது, ஜூடோ ரத்னம் அவர்கள் வடிவமைத்ததுதான். தன்னுடைய 93 வயதில் பூரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மூத்த சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியுரிந்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவ் என பல்வேறு முன்னணி நடிகர்களில் படங்களில் ஒரே நேரத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம்.
இவரது மறைவை ஒட்டி சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன் சங்கத்தில் அவரது உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் அவரது உடல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் எடுத்துச் செல்லப்பட்டு நாளை மாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.