புதுடெல்லி: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெயராம் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மறைந்த உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல தபேலா கலைஞர் ஜாஹிர் ஹுசைன், பிரபல குழந்தைகள் நல மருத்துவர் திலீப் மஹலானாபிஸ் (மேற்கு வங்கம்), பிரபல கட்டிடவியல் நிபுணர் பாலகிருஷ்ண தோஷி (குஜராத்), அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிதவியலாளர் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகிய 6 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முலாயம் சிங் யாதவ், திலீப் மஹலானாபிஸ், பாலகிருஷ்ண தோஷி ஆகியோருக்கு அவர்களது மறைவுக்குப் பின்னர் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
பத்ம பூஷண்: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசைக்கலைஞருமான வாணி ஜெயராம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எம்.பிர்லா, கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா, ஐஐஎஸ்சி இயற்பியல் துறைப் பேராசிரியர் தீபக் தர் (மகாராஷ்டிரா), தெலங்கானாவைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர் சுவாமி சின்ன ஜீயர், பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர் (மகாராஷ்டிரா), மொழியியல் பேராசிரியரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் இணை துணைவேந்தருமான கபில் கபூர்(டெல்லி), இன்போசிஸ் நிறுவனஇணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும் இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவருமான சுதா மூர்த்தி (கர்நாடகா), ஆன்மிகத் தலைவர் கமலேஷ் டி.படேல் ஆகிய 9 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், சமூகசேவகர்களும், பாம்புப் பிடாரன்களுமான வடிவேல் கோபால்-மாசி சடையன், பரதநாட்டியக் கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் நளினி பார்த்தசாரதி, ஆந்திராவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கீரவாணி, பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.