முல்லைதீவு மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, சிறந்த கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நட்புறவு களவிஜயமொன்றை நேற்று (26) மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தித்திறன் தொடர்பான முறைமைகள், பதிவேட்டறை முகாமைத்துவம் மற்றும் புத்தாக்க நடைமுறைகளை பார்வையிட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருடன் அலுவலக மட்டத்தில் உற்பத்தித் திறன் நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியில் அரச பிரிவில் முதல் முறை விண்ணப்பித்து இரண்டாம் இடத்தையும், அதனைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.