கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பம் குழுவில், ஓசூர், கிருஷ்ணகிரி சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சிலம்பம், குத்துவரிசை மற்றும் தற்காப்பு கலைகள் பயின்று வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சிலம்பம் மற்றும் குத்துவரிசை நிகழ்த்தும் முயற்சியில் மாணவர்கள் களமிறங்கினர்.
5 வயது முதல் 14 வயது வரையிலான, 45 மாணவிகள், 85 மாணவர்கள் என, 130 பேர் தொடர்ச்சியாக, 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியும், குத்துவரிசை கலைகள் நிகழ்த்தியும் காட்டினர். இந்த முயற்சியை பெங்களூரில் செயல்பட்டு வரும், GWR – Global World Record அமைப்பினர் பாராட்டி, உலக சாதனை பட்டியலில் சேர்த்தனர். மேலும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினர்.
Global World Record அமைப்பின் இயக்குநரான பிரனீதா லிங்கத்திடம் போனில் பேசினோம். “இந்தியாவில் இதுவரை சிலம்பம் சுற்றி மட்டுமே சாதனைகள் படைத்துள்ளனர். சிலம்பம் மற்றும் குத்துவரிசையை ஒன்றாக நிகழ்த்தி யாரும் சாதனை செய்தது இல்லை. இதனால், நாங்கள் இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்துள்ளோம். நாங்கள் இது போன்று பல கலைகள், முயற்சிகளை ஊக்குவித்து வருவதுடன், கர்நாடக மாநில அரசுடன் இணைந்து பல்வேறு சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் உதவிகள் செய்து வருகிறோம்’’ என்றார்.
ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பம் குழுவின் தலைவர் லோகநாதன் நம்மிடம், “சிலம்பமும், குத்து வரிசையும் தமிழர்களின் பாரம்பர்யங்களுள் ஒன்றாக, வீர விளையாட்டுகளாக உள்ளன. இவற்றை மாணவர்களிடையே கொண்டு சேர்த்து, இக்கலையை காப்பதற்காக, 14 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். சிலம்பத்தில் 50 வகையான சுற்றுகள் உள்ளன. இன்று மாணவர்கள் தொடர்ந்து 2 மணி நேரம், 50 வகையான சுற்றுகள் மற்றும் குத்துவரிசை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.