கோவையைச் சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா, கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து, பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஊட்டி வழிகாட்டியாக இருந்து வருகிறார். ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அவர் பெயர் இடம் பிடித்துள்ளது.
கோவை, வடவள்ளி அருகே பி.என். புதூரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் கணவர் பைரவ். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என ஸ்ரீவித்யா விரும்பியுள்ளார். முதல் பிரசவத்தின்போது, அதிகம் பால் சுரப்பதினால் (Hyper Lactation) பால் வீணாகி வருத்தம் அடைந்துள்ளார்.
எனினும், தாய்ப்பால் தானத்துக்கான சூழ்நிலை அப்போது அவருக்கு அமையவில்லை. அதன்பின், அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிரசவித்த ஐந்தாவது நாளிலிருந்து தாய்ப்பால் தானம் செய்யத் தொடங்கினார் ஸ்ரீவித்யா. அவ்வகையில், கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். இதனால், இதுவரை சுமார் 2000 குழந்தைகள் வரை பயனடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அவர், ’அமிர்தம் தாய்ப்பால் தானம்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து, தாய்ப்பால் தானம் செய்வது வருகிறார்.
மேலும் திருப்பூர், கோவை, சென்னை, மதுரை, சேலம் என, பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் தானம் செய்ய விரும்பும் பெண்களை இணைத்து, வாட்ஸ்அப் குழு வாயிலாக, பல பெண்களும் தாய்ப்பால் தானம் செய்ய ஊக்கமளித்து வருகிறார்.
இது குறித்து ஸ்ரீவித்யா கூறுகையில், “பல இளம் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும். தானமாகக் கொடுக்கும் பால், பல குழந்தைகளைக் காப்பாற்றும். அவர்களது வளர்ச்சியில் இது முக்கியப் பங்கு வகிக்கும். இது குறித்த விழிப்புணர்வுக்கு வேண்டும்” என்றார்.
ஸ்ரீவித்யா வழங்கும் தாய்ப்பால், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் சேர்க்கப்பட்டு அங்கு பிறக்கும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. அவரது இந்த சாதனைக்காக ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ஸ்ரீவித்யா இடம் பிடித்துள்ளார். அவருக்குப் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.