பொது வருங்கால வைப்பு நிதி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில், பிபிஎஃப் முதலீட்டுக்கான வரம்பை அதிகரிக்க நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது பிபிஎஃப், அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கும் சாமானியருக்கும் சிறந்த முதலீட்டுத் தேர்வாகும். அதில் முதலீடு செய்யப்பட்ட பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள் இந்த முதலீட்டின் மூலம் சிறந்த வருமானத்தையும் பெறலாம். இதில் வரியும் மிச்சமாகும்.
நிதி அமைச்சரிடம் கோரிக்கை
பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் இம்முறை நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. ஆகையால், மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிகாலத்தின் கடைசி முழு பட்ஜெட்டாக இதுவாக இருக்கும். இந்த நிலையில், அரசு, சாமானியர்களின் கோரிக்கைகளுக்கும், முக்கிய தேவைகளுக்கும் செவி சாய்க்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், பிபிஎஃப் தொடர்பான இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பிபிஎஃப் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழி என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இதில் முதலீடு செய்து 1.5 கோடி நிதியை திரட்டலாம் என்பது தெரியுமா? இது குறித்த முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். அதிகபட்ச வட்டியைப் பெற்று உங்கள் தொகையை எப்படி பன்மடங்காக அதிகரிப்பது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இந்த வழியில் 1.5 கோடி நிதியை திரட்டலாம்
ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் PPF-இல் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த பிறகு, உங்கள் பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகளுக்கான பிளாக்குகளில் நீட்டிக்கலாம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் பிபிஎஃப் கணக்கின் முழு நிதியும் 1.5 கோடி ரூபாய்க்கு (ரூ. 1,54,50,911) மேல் இருக்கும். இதில் உங்கள் முதலீடு ரூ.45 லட்சமாகவும், வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் ரூ.1.09 கோடி ரூபாயாகவும் இருக்கும்.
25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்
எவ்வளவு சீக்கிரம் நீங்கள் பிபிஎஃப்-இல் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். 25 வயதான ஒரு நபர், ஆண்டுக்கு 1.5 லட்சத்தை PPF-ல் முதலீடு செய்கிறார் என வத்துக்கொள்வோம். அந்த நபர் 55 வயதில் அதாவது ஓய்வு பெறுவதற்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரராகலாம்.
வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது
மாதாந்திர அடிப்படையில் PPF இல் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தப் பணம் நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பாதிக்கும் வட்டி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில் உங்கள் பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். பிபிஎஃப்-ல் பணத்தை எப்போது டெபாசிட் செய்ய வேண்டும் என்பதற்கு நிலையான தேதி எதுவும் இல்லை. நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
அதிக வட்டி பெற வழி
பிபிஎஃப் மீதான வட்டி கணக்கீடு ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதி வரை செய்யப்படுகிறது. இந்த கணக்கீடு முதலீட்டாளரின் கணக்கில் உள்ள தொகையில் செய்யப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால், அதே மாதத்தில் அந்த பணத்திற்கு வட்டி கிடைக்கும். ஆனால் 5 ஆம் தேதிக்கு பிறகு, 6 ஆம் தேதி அல்லது அதன் பிறகு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு அடுத்த மாதம் வட்டி கிடைக்கும்.
எளிய கணக்கீடு உதாரணம்
ஏப்ரல் 5 ஆம் தேதி உங்கள் கணக்கில் ரூ 50,000 டெபாசிட் செய்ததாக வைத்துக்கொள்வோம். மார்ச் 31 ஆம் தேதி வரை உங்கள் கணக்கில் ஏற்கனவே ரூ 10 லட்சம் உள்ளது என கருதினால், ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரை, உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகை ரூ.10,50,000. இதற்கான மாதாந்திர வட்டி 7.1% – (7.1%/12 X 1050000) = ரூ 6212
ஒரு வேளை ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் ரூ.50,000 தொகையை டெபாசிட் செய்யாமல், ஏப்ரல் 6ஆம் தேதி டெபாசிட் செய்தீர்கள் என்றால், 5 முதல் ஏப்ரல் 30 வரை உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.10 லட்சமாக இருக்கும். இதற்கான மாத வட்டி 7.1% (7.1%/12 X 10,00,000) = ரூ 5917.
இரண்டு உதாரணங்களிலும் முதலீட்டுத் தொகை 50,000 ரூபாய்தான். ஆனால் டெபாசிட் செய்யும் முறையால் வட்டி தொகையில் வித்தியாசம் ஏற்படுகின்றது. பிபிஎஃப்-ல் உங்கள் பணத்திற்கு அதிக வட்டி வேண்டுமானால், இந்த தந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். நிபுணர்களும் இதே ஆலோசனையை வழங்குகிறார்கள். உங்களுக்கும் நல்ல வருமானம் வேண்டுமானால், புதிய நிதியாண்டு தொடங்கியவுடன், ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் தொகையை பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.