அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? ஜிகே வாசன் சொன்ன சூச்சுமம்!

அதிமுக கூட்டணி வேட்பாளரை மற்ற கூட்டணி கட்சிகள் உரிய காலக் கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்று
தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு இடைத்தேர்தல் விட்டுக்கொடுத்தோம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் என்பவரின் தாயார் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் நேற்று அவருடைய இல்லத்திற்கு சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ உடனிருந்தார்.

இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்சனைகளில் கூட எந்த முடிவும் எடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது. உடனடியாக பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. எங்களை (அதிமுக கூட்டணியை) ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலக்கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

திமுக ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை,திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு விட்டுக்கொடுத்தோம்” என்றார்

பேட்டியின் போது முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ உடனிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.