சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த்(29) போட்டியிடுகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், கட்சியின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் சண்முகவேல் தலைமையில் 294 பேர்கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். பிப்.3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.
இரட்டை இலை சின்னத்தை பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு யாருடைய சுயநலம், பதவி வெறி காரணம் என்பதுதமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.இதனால் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2017-ம் ஆண்டுபோல இப்போதும் இரட்டை இலை யாருக்கும்கிடைக்காத நிலைதான் வரும். பண மூட்டையால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங் கட்சியினருக்குஎதிராக நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். அதேபோன்று இந்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை யுடன் போட்டியிடுகிறோம். மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறோம். கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.