கிழக்கு ஜெருசலம் வழிபாட்டு தலத்துக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெருசலம் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் கடந்த சில மாதங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி, பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் மும்முறம் காட்டி வருகிறது. மேலும், பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அதிகரித்துவருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், யூதர்கள் கூட்டமாக வழிபாடு செய்யும் வழிப்பாட்டு தளத்தில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடந்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலில், யூதர்கள் கூட்டமாக நேவி யாகவ் என்ற பகுதியில் வழிபாடு செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்குள் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 7 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டின் போது சிதறி ஓடிய மக்களில் சிலர், காவல்துறைக்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறைக்கும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவருக்குமிடையே சுமார் 20 நிமிடம் சண்டை நடந்தது. இதில் குற்றவாளி மீது 4 குண்டுகள் பாய்ந்து, சம்ப இடத்திலேயே கொல்லப்பட்டான். அதில் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.