ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன.
மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள். மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை. இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM