அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், போதை பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில், புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கம், மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு உரிய சட்டம் கொண்டு வருவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி, கோடிகளில் புரண்ட வியாபாரிகளும், லட்சங்களில் லஞ்சம் வாங்கி கொழித்த அதிகாரிகளும் கூட அதிர்ச்சி தான் ஆகியிருப்பாங்க!
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வங்கதேச நபர்கள் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர். பல வழியிலும் ஊடுருவல் நடக்கிறது என, தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது, ஒரு பொய் குற்றச்சாட்டு என்று கூறுகிறது.
இதையே நீங்க சொல்லாம, ‘திராவிட மாடல்’ அரசுக்கு முட்டு கொடுக்கும், ‘முட்டு தாங்கி’கள் கூறியிருந்தா, அரக்க பறக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கும்!
பா.ஜ., தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு ஆட்சியில், கல்வி, பொருளாதாரத்தில் சிறுபான்மையினர் சிறந்த நிலையை அடைந்துள்ளனர். வெளிநாட்டு ஊடகமான, பி.பி.சி., மற்றும் அமெரிக்காவின் சில அச்சு ஊடகங்கள், சிறுபான்மையினர் நசுக்கப்படுவதாக சித்தரித்து, பாரதத்தின் வளர்ச்சியை தடுக்க முனைகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 2002 குஜராத் கலவரத்தில் பாதித்த மக்களை வைத்து, பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரானவர் என, சித்தரித்து வீடியோ வெளியிடுகின்றன.
தீபாவளிக்கு கேப் வெடிக்கிற மாதிரி, அமெரிக்காவில் அப்பாவிகளை நித்தம் நித்தம் சுட்டு தள்ளும் சம்பவங்களை, அந்த நாட்டு ஊடகங்கள் கண்டிக்காம, அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிடலாமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:
மத்திய அரசின் அலுவல் மொழியாக ஹிந்தி மொழியுடன், தொடர்ந்து கால நிர்ணயமின்றி ஆங்கிலமும் நீடிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வருவது ஒன்றே, மொழிப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மொழி மட்டுமே ஆட்சி மொழியாக்கப்படுவது, பன்முகத்தன்மை உடைய இந்தியாவுக்கு சரிவராது என்பதை, மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
பிரிட்டிஷ்காரர்கள் புகுத்திய ஆங்கிலத்தை விழுந்தடித்து கொண்டுகற்பதும், நம் நாட்டில் அதிகமாக பேசும் ஹிந்தி மொழியை கற்க மறுப்பதும் தான் பிரச்னைக்கு காரணம்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்