வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. வேலுநாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவளுக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன். என் அப்பத்தா வேலுநாச்சியாருக்கு ஏதோ மரப்பாச்சி பொம்மை போல் ஒரு சிலை உள்ளது, ஆனால் யார் யாருக்கோ சிலைகள் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் அந்த சிலைகளை எல்லாம் மொத்தமாய் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை, சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.
வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள். தமிழகத்தின் எல்லா இடத்திலும் அடிப்பார்கள், ஒருநாள் நடக்கும். இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் அறம், இருந்துட்டு போரான் பா, வாழ்ந்துட்டு போரான் பா என வந்தோர்களை வாழவைக்கும் தமிழர்களின் அறம் தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம். தங்களை தற்காத்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இப்போது தான் தமிழர்களுக்கே தோன்றியிருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், சமத்துவத்தையும், சம இட ஒதுக்கீடையும் எப்போது ஏற்படுத்துவீர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என எப்படி அரசே அறிவிக்கமுடியும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்களிடம் ஜிஎஸ்டி வசூலீக்கப்படாமலா இருக்கிறது, இது என்ன இட ஒதுக்கீடு, இது என்ன சமூக நீதி என்று கேள்வியெழுப்பினார்.
முக்குலத்தோர்க்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் அவரவர்களின் வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்கப்பட வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள், ஆனால் உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள், எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும். வட இந்தியர்கள் உங்களை வீழ்த்துவதற்குள் விழித்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM