புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை சுதேசி மில் வளாகத்தில் வனத்துறை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிபட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து வருகின்றனர். வனவிலங்குகள் குணமடைந்தவுடன் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்து விடுவது வழக்கம். இதேபோல் கடந்த காலங்களில் நரி, முள்ளம்பன்றி, எறும்பு திண்ணி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து காட்டுக்குள் விட்டனர். இதற்காக வனவிலங்கு சிகிச்சை மற்றும் பாதுகாப்பகத்தினை செயல்படுத்தி வருகிறது. கால்நடைத்துறை மருத்துவர் குமரன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
தற்போது இங்கு மான்கள், கிளிகள், மலைப்பாம்பு, நல்லபாம்பு, கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகள், நரிக்குறவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள், பறவைகள் ஆகியவற்றைபராமரித்து வருகின்றனர். இப்படி பராமரிக்கப்பட்டு வரும் மான்களில் ஒரு மான் மூன்று பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த மான்கள் துள்ளி குதித்து, தாவி ஓடும் அழகை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அங்கு அடிபட்டு காப்பற்றிய மயிலை காட்டுக்குள் விட்டும், அது மீண்டும் வனத்துறைக்கே திருமபி வந்து, சுதேசி மில் வளாகத்திலே தங்கியுள்ளது. அவ்வப்போது கீழே இறங்கி வரும் மயில் வன ஊழியர்களுடன் சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது.
இதுகுறித்து வனத்துறை ஊழியர்களிடம் கேட்டபோது: வன உயிரின சிகிச்சையகத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் மான் குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை மிகுந்த பாதுகாப்போடு கண்காணித்து வருகிறோம். அதேபோல் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் பறவைகள் சிகிச்சைக்கு பின் சுதந்திரமாக பறக்கவிடப்படுகின்றன. கடந்த காலங்களில் பிடிபட்ட நரி, முள்ளம்பன்றி, பச்சை கிளிகள், வெளிநாட்டு பறவைகள் ஊசுட்டேரிப்பகுதியில் விடுவித்துள்ளோம். அதேபோல் அழிந்து வரும் யானை மரம், சிவந்தோனியா, தாலி பனைமர விதைகளை சேகரித்து வைத்திருக்கிறோம். இதனை அரசின் பொது இடங்களில் நட்டு பராமரித்து வருகிறோம் என்றனர்.