ஆனைமலை: பொள்ளாச்சி வழியாக வாகன போக்குவரத்து அதிகமுள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைலை செல்லும் ரோட்டில் விபத்தை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுடும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, ஒடையக்குளம், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பகல், இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது.
ஆனைமலை பகுதிக்கு வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த வழித்தடைத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனைமலை ரோட்டின் இருபுறமும் மரங்கள் இருந்தாலும், சாலையோரம் மின்விளக்குகள் இருப்பது மிகவும் குறைவாக உள்ளதால் இருள் சூழ்ந்தவாறு உள்ளது. சில இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதியில் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு வேகக்கட்டுப்பாட்டு தகவல் இல்லாமல் இருப்பதால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் எது வளைவு, எந்த பகுதியில் வேகத்தடை உள்ளது, பள்ளம் எது என்று தெரியாமல் திணறுகின்றனர்.
இதில் சுப்பேகவுண்டன்புதூர், தாத்தூர் பிரிவு உள்ளிட்ட சில இடங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் போகிறது. இதனாலே சிலநேரங்களில் விபத்து நேரிடுகிறது.தற்போது ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடப்பதால் வெளியூர்களில் இருந்து பலரும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். எனவே, இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வரும் இந்த வழித்தடத்தில் உள்ள வளைவுகளில் பாதுகாப்பு குறித்த தகவல் அடங்கிய பலகை மட்டுமின்றி, இரவுநேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் பாதையில் ஆங்காங்கே ரிப்ளைக்டர் ஸ்டிக்கர் உள்ளிட்டவை அமைத்து விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.