சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகே உள்ளது பல்சானா. இங்குள்ள நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் காருக்கு அடியில் சிக்கி கொண்டார்.
எனினும் கார் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து 12 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீஸார் நடத்திய விசாரணையில், காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்தவர் பெயர் சாகர் பாட்டில் என்று தெரியவந்தது. அதேபோல் கார் ஓட்டிச் சென்றவர் கட்டுமான தொழில் மற்றும் உணவகம் நடத்தி வரும் பிரேன் லடுமோர் அஹிர் என்பது தெரிந்தது.
இதுகுறித்து சூரத் போலீஸ் இணை கண்காணிப்பாளர் எஸ்.என்.ரதோட் நேற்று கூறியதாவது:
கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் கீழே விழுந்து காருக்குள் சிக்கியுள்ளார். அப்படி இருந்தும் கார் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளது. அதை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அத்துடன் காரையும் விரட்டிச் சென்றுள்ளார். அதைப் பார்த்து காரை நிறுத்திவிட்டு, அஹிர் தப்பியோடிவிட்டார். முதலில் மும்பை சென்றவர், பின்னர் ராஜஸ்தானில் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். கடைசியில் அவருடைய மொபைல் போன் மூலம் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர். இவ்வாறு போலீஸ் இணை கண்காணிப்பாளர் ரதோட் கூறினார்.