BBC Documentary Controversy: குஜராத் கலவர வழக்கு தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் எதிரொலி

நியூடெல்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் பிபிசி ஆவணப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக; பல மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிபிசி ஆவணப்படச் சர்ச்சை சர்வதேச அளவில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பிய நிலையில், தற்போது, இந்தியாவின் கல்வி நிலையங்களில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது…
 
பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக தேசிய தலைநகரில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சர்ச்சை வெடித்தது. அந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே சலசலப்பை உருவாக்கியதாகக் கூறி பல மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஜனவரி 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ‘இந்தியா: மோடி கேள்வி’ (‘India: The Modi Question’) என்ற ஆவணப்படத்தை திரையிட உள்ளதாக இந்திய இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு (Students Federation of India (SFI))யைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

முன் அனுமதியின்றி படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்த நிலையில், “அனுமதியின்றி வளாகத்தில் மாணவர்களின் கூட்டமோ அல்லது எந்த திரைப்படத்தையும் திரையிடவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்துகிறது.

அமைதியான கல்விச் சூழலை அழிப்பதற்காக செயல்படுவர்களைத் தடுக்க பல்கலைக்கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ஜாலியா மிலியா பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) பல்கலைக்கழக நிர்வாகத்தால் திரையிடலை அனுமதிக்காததால், தங்கள் மொபைல் ஃபோனில் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது கற்களால் தாக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், டெல்லி வசந்த் குஞ்ச் காவல்நிலையத்திற்கு பேரணியாக சென்று கல்வீசியவர்களுக்கு எதிராக புகார் அளித்தனர். ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தொழிலாளர்கள் கற்களால் தாக்கியதாக JNUSU தலைவர் ஐஷி கோஷ் குற்றம் சாட்டினார்.

அதேபோல, கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பு ஜனவரி 27 அன்று மாலை 4 மணிக்கு ஆவணப்படத்தை திரையிட பல்கலைக்கழக அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது.

அதேபோல, கேரள மாநிலத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதை பொருட்படுத்தாமல் பல்வேறு அரசியல் அமைப்புகளும், பிபிசியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மத்திய அரசு, பிபிசியின் ஆவணப்படம் தொடர்பாக முறைகேடாக நடந்துக் கொள்வதாகவும் வதந்திகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன மற்றும் ஆவணப்படத்தைப் பகிர்ந்துள்ள பல யூடியூப் வீடியோக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பிபிசியின் ஆவணப்படத்தை அகற்றியுள்ளன.

ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இரண்டு பகுதிகள் கொண்ட பிபிசி ஆவணப்படத்தின், இரண்டாவது அத்தியாயத்திற்கான இணைப்பை திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.