Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு மாற்றம்தான். சினைப்பையானது தான் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அளவை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வரும். இது பெரிமெனோபாஸ் பருவம் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய நாள்களிலேயே ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பானது முழுமையாக நின்று, பீரியட்ஸும் முற்றுப்பெறும். இதைத்தான் நாம் மெனோபாஸ் என்கிறோம்.
ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் எலும்புகளின் அடர்த்தியும் குறையும். கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். எதுவுமே சாப்பிடாவிட்டாலும் எளிதில் எடை கூடும். அதேபோல மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இதய நோய் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
மெனோபாஸ் வந்தவர்களுக்கு கொழுப்பு குறைவான தாவர உணவுகள் ஏற்றவை. கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், யோகர்ட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் டி, வைட்டமின் கே, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்றவையும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். தூக்கத்துக்கும் உதவும்.
இந்தப் பருவத்தில் ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு என்றாலே ஆபத்தானது என நினைக்க வேண்டாம். மீன்கள், சியா சீட்ஸ், ஆளி விதை, வால்நட்ஸ், சோயா போன்றவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மெனோபாஸ் பருவத்தில் ஏற்படும் வியர்வை, உடல் சூடாவது போன்றவற்றைக் குறைக்கும்.
பாலிஷ் செய்யாத தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை எடுப்பதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். வைட்டமின் பி சத்தும் கிடைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும்.
காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து மட்டுமன்றி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் என்பதால் அவையும் இந்தப் பருவத்தில் அவசியம். நெல்லிக்காய், கறுப்பு திராட்சை, நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை உடல் சூடாவதைக் குறைக்கும். காய்கறிகளில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி போன்றவை சிறந்தவை. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.
பைட்டோஈஸ்டரோஜென் அதிகமுள்ள சோயா பீன்ஸ், வேர்க்கடலை, ஆளி விதை, க்ரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம், ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் ஏற்படும் அவதிகளை ஓரளவு குறைக்க முடியும்.
அடுத்தது உடல் எடைக்கேற்ப புரதச்சத்து எடுக்கப்பட வேண்டும். 60 கிலோ எடையுள்ள ஒருவர், தினமும் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், பால் உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும். இரண்டு கைப்பிடி அளவு காய்கறிகளும் ஒரு கைப்பிடி அளவு பழங்கள் மற்றும் தானியங்களும் போதும். அசைவ உணவுகளை உள்ளங்கை அளவுக்கு மட்டுமே எடுக்க வேண்டும்.
சீஸ் என்றால் இரண்டு விரல் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் எடுக்கும்போது கட்டைவிரலில் பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை சேர்த்த, அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பேக்கரி உணவுகள் வேண்டாம். ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். காபி அளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றுடன் தினமும் சிறிது நேரம் வெயில் படும்படி இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவையும் முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.