நெல்லை மாநகராட்சிக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியதற்காக மாநகராட்சிப் பணியாளர்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள் பற்றி கவுன்சிலர்கள் பேசினார்கள். தி.மு.க கவுன்சிலர் ரவீந்திரன் பேசுகையில், “மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய மேயர் சரவணன், அறைக்குள் தி.மு.க மாநகரச் செயலாளர் சுப்ரமணியன், தி.மு.க பகுதிச் செயலாளர் செல்லத்துரை ஆகியோரை மணிக்கணக்கில் அமரவைத்து ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதனால் என்னைப் போன்ற கவுன்சிலர்கள்கூட மேயரைச் சந்திக்க முடிவதில்லை” என்று பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
தி.மு.க கவுன்சிலர் ரவீந்திரனின் பேச்சுக்கு மேயரின் ஆதரவாளர்களான அவர் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் அவையில் தி.மு.க கவுன்சிலர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ”மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்காகவே தி.மு.க நிர்வாகிகள் எனது அறைக்கு வந்தார்கள். அதில் தவறு எதுவும் கிடையாது” என்று மேயர் பதிலளித்தார்.
ஆனாலும் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் தொடர்ந்து மேயருக்கு எதிராகப் பேசியதால் குழப்பம் நீடித்தது. அவர்களைச் சமாதானப்படுத்திய ஆணையர் சிவ கிருஷ்ணமூரித்தி, “இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். நீங்கள் தெரிவிப்பது போன்று கமிஷன் விவகாரங்கள் நடந்திருந்தால் காவல்துறையில் புகார் செய்யப்படும்” என்று பேசி சமாளித்தார்.
நெல்லை மண்டலத் தலைவரான மகேஸ்வரி பேசுகையில், “நான் மண்டலத் தலைவராக இருந்தபோதிலும் எனது மண்டலத்துக்குட்பட்ட 14-வது வார்டின் கவுன்சிலராக இருக்கும் மேயர் சரவணன், என்னைத் தனது வார்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். மண்டலத் தலைவருக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. எங்கள் பகுதிக்கு எந்த நலத்திடமும் இதுவரை கொண்டுவரப்படவும் இல்லை” என்று குமுறினார்.
பணிநியமனக் குழுத் தலைவரான கோகிலவாணி, கடந்த கூட்டத்தில், “பணி நியமனங்களில் பெருமளவு பணம் பெறப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரியாமலே மாநகராட்சியில் பணி நியமனங்கள் நடந்திருக்கின்றன. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்” என்று மனு அளித்திருந்தார். இது குறித்து விளக்கம் அளித்து அப்போது பேட்டியளித்த மேயர் சரவணன், தன் மீது புகார் கூறியவர்கள் தன் அறைக்கு வந்து வருத்தம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, “அப்படி யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அதனால் மேயர் தனது பேட்டி குறித்து விளக்க வேண்டும்” என்று கோகிலவாணி வலியுறுத்தினார்.
நெல்லை மாநகராட்சியின் பெரும்பாலான கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராகவே பேசியதால், மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. மேயருக்கு ஆதரவாகப் பேசிய இரு கவுன்சிலர்களுடன் பிற தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர்களின் புகார்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் மேயர் திணறினார் அருகில் இருந்த ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உறுப்பினர்களைச் சமாளித்து அமைதியாக இருக்க வைத்தார்.
கூட்டத்தின் தொடக்கம் முதலாகவே தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று மேயருக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் கூட்டம் அவசரமாக முடித்துக் கொள்ளப்பட்டது. நெல்லை மாநகராட்சிக் கூட்டம் முழுவதும் தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் எதிரொலித்தது. அதனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களே அரசின் நலத்திட்டங்கள் எதுவும் மக்களுக்குக் கிடைக்காதது போலப் பேசியதை அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகைப்புடன் பார்த்தனர்.