அதிவேக சாதனையில் 'பதான்'
பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பெருமையை இழந்து, தென்னிந்தியப் படங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தது. இழந்த அந்தப் பெருமையை தற்போது 'பதான்' படம் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.
படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும் 429 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 265 கோடி மொத்த வசூலாகவும், அதில் நிகர வசூலாக 220 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 164 கோடி ரூபாய் மொத்த வசூலாக அமைந்துள்ளது.
ஒரு ஹிந்திப் படம் அதி வேகமாக 400 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்ற முதல் படம் 'பதான்' என்ற சாதனையைத் தற்போது புதிதாக படைத்துள்ளது. நேற்று ஞாயிறு வசூலையும் சேர்த்தால் படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடவும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டின் முதல் பெரும் வெற்றிப்படமாக 'பதான்' அமைந்துள்ளது. ஹிந்திப் படங்களின் வசூலில் மேலும் சில புதிய சாதனைகளை இப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.