ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அதேபோன்று தேமுதிக, நாம் தமிழர், அமமுக போன்ற இதர கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31) தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கலானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசினை நடைபெற்று அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாள்தோறும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பமனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரியை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்புமன தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் ஈரோட்டுக்கு கிழக்கு தொகுதி அரசியல் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.