சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று (ஜன.30) ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் 13 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். 11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களைக் கண்டறிதல், பெயர்ப் பட்டியல், ஹால்டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக தேர்வுத் துறை சார்பில் இன்று (ஜன.30) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துறை சார்ந்த இயக்குநர்கள், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மாவட்ட அலுவலகங்களில் இருந்து வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு இடம் மாற்றுதல், தேர்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், அறைக் கண்காணிப்பாளர் உட்பட தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பட்டியல், செய்முறைத் தேர்வு என பல்வேறு வழிகாட்டுதல்கள், இக்கூட்டத்தில் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.