தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே இன்று அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி மறுத்தவர்களிடம் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட அனுமதிக்கும்படி அறநிலையத்துறையிடம் மனு அளித்துள்ளனர். இதையறிந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ‘பொங்கல் வைக்க அனுமதி கேட்டவர்களுக்கு நாங்கள் எங்களுக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கி கோயில் கட்டி கொடுத்துள்ளோம்.
அந்த கோயிலில் அவர்கள் வழிபட்டு வரும் நிலையில், அவர்களை மீண்டும் இந்த கோயிலில் பொங்கல் வைக்க அனுமதிக்க முடியாது’ என அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. பின்னர், அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி கேட்ட தரப்பினரை, இன்று பொங்கல் வைத்து பூஜை செய்து கொள்ளும்படி அறநிலையத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதையறிந்த மற்றொரு தரப்பினர், அம்மன் கோயிலின் கதவை சாத்திவிட்டு கோயிலுக்கு எதிரே அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த எஸ்பி கார்த்திகேயன் அங்கு வந்து கோயில் எதிரே அமர்ந்துள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவ இடத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 500க்கும் ேமற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.