'அரசியலை விட்டு விலக தயார்..!' – அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜக நிரூபிப்பதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது. வீடியோ தடயவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார்.

கே.என்.நேரு
, ஈ.வி.கே.எஸ் பேசிய ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு. ஆனால் அதை விட அமைச்சர் எவ்வாறு அவதூறாக பேசுகிறார் என்பது அதில் பதிவாகி உள்ளது. வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம்.

சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை. தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை யார் வெளியிட்டாலும் கவலையில்லை. அது பொய் செய்தி. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை பார்க்க ஒருவர் கூட வர மாட்டார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எத்தனையோ தமிழர்கள் வேலை பார்க்கின்றனர். ஐதராபாத்தில் தமிழர்கள் இருக்கின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் மும்பையில் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் திருப்பூரில் வட மாநிலத்தவர் பணி செய்வது குற்றமா? பிற மாநில அரசியல்வாதிகள் இங்குள்ள அனைவரும் அவரவர் மாநிலத்திற்கு செல்லுங்கள் என அரசியல் செய்தால் அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு என்னவாகும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.