மதுரை: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிகப் பெரிய அரசியல் லாபம் கிடைக்கும் வகையில் பிப்.2 முதல் 15 நாட்களுக்கு மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கட்சியினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பிப்.2-ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதையொட்டி மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் விளக்க மாநில அளவில் துணைத் தலைவர்கள் கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, தொழில் பிரிவு தலைவர் அசோக் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் 3 பேர் கொண்ட குழுவும் பாஜகவில் அமைக்க்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிப்.2-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் மத்திய அரசின் பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்களை விளக்க மாநில மற்றும் மாவட்ட குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் குரல் குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கும்போது, மத்திய அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கு புரியும்படி உள்ளது. அதனை கடைகோடி மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்து 15 நாட்களுக்குள் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும்.
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து ரோட்டரி சங்கங்கள், லயன்ஸ் கிளப்கள், தொழில் அமைப்புகள், எம்பிஏ கல்லூரிகளில் பேச வேண்டும். பட்ஜெட் விளக்கக் கூட்டங்களில் எதை பேச வேண்டும் என்பதை மாநிலக்குழு முடிவு செய்து கையேடு தயாரித்து மாவட்ட குழுக்களுக்கு பிப்.2 இரவில் வழங்க வேண்டும்.
கூட்டங்களில் பேசும்போது இலவசங்கள் தரமாட்டோம், ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசமாட்டோம், நாட்டின் நலனுக்காகவே செயல்படுகிறோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய பட்ஜெட் குறித்து விளக்குவதுடன், மாநில அரசின் தோல்விகளையும் மக்களிடம் விளக்க வேண்டும்.
பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் குறித்து மாவட்ட குழுக்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தி சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களால் பாஜகவுக்கு மிகப் பெரிய அரசியல் லாபம் கிடைக்க வேண்டும். அதற்கு 15 நாட்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்