சென்னை: தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள் போன்ற மக்களுக்கான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, அவற்றுக்கு மின் பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து 60 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது.
ஆனால், இவ்வளவு காலஅவகாசம் வழங்கியும், மின் கட்டணத்தை குறித்த காலத்துக்குள் செலுத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ளன. இதேபோல, குடிநீர் வாரியமும் ரூ.2,400 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளது.
இவை தவிர, மாநகராட்சிகள் ரூ.660 கோடி, நகராட்சிகள் ரூ.319 கோடி, பேரூராட்சிகள் ரூ.48 கோடி, ஊராட்சிகள் ரூ.932 கோடி என உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் ரூ.1,959 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. பிற அரசுத் துறைகளும் சேர்த்து மொத்தம் ரூ.4,584கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளன. ஏற்கெனவே, மின்வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்நிலையில், அரசு துறைகள் மின் கட்டணத்தை செலுத்தாததால், வாரியத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.