அரியலூர்: அரியலூர் அருகே இன்று (ஜன.30) காலை தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி இன்று காலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை, அரியலூர், பெரம்பலூர் வழியாக துறையூர் செல்லும் இந்த பேருந்து சுமார் 50 பயணிகளுடன் செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்தின் அருகே காலை 9 மணியளவில் வந்தபோது, சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரத்தில் பறிக்கப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்தது.
தகவலறிந்து சென்ற அரியலூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் கார்த்தி (20) என்பவர் பேருந்தில் சிக்கி அதேயிடத்தில் உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அரியலூர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.