புதுடில்லி, குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி., நிறுவனத்தின் ஆவணப் படத்துக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை அடுத்த வாரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், ௨௦௦௨ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை தயாரித்துள்ளது.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை கலவரத்துடன் தொடர்புபடுத்தி இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, இந்த ஆவணப்படத்துக்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துஉள்ளது.
இதை எதிர்த்து, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மேலும் மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோரும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. வரும் பிப்., ௬ல் விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.
இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை இப்படித்தான் வீணடிக்கின்றனர்’ என குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement