சென்னை: “இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அண்ணல் காந்தியடிகள், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் – பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள்.
இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழக அமைச்சர்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.