ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று முடிவடையும் இந்நிகழ்வையொட்டி, அங்கு உள்ள லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் ராகுல். தொடர்ந்து இன்று நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவின் நிறைவு விழாவில் 12 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியில் `இந்திய ஒற்றுமை யாத்திரை, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நாட்டின் தெற்கு முனையான கன்னியாகுமரியில் தொடங்கி 3,970 கிமீ, 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை சுமார் 145 நாட்களில் கடந்து இன்று (ஜன.,30) வடக்கு முனையான ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடைகிறது. பல கட்சிகளின் தலைவர்கள் இதன் நிறைவு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சிபிஐ(எம்), சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே), கேரள காங்கிரஸ், பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு, மெஹபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் ஷிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் விழாவில் கலந்து கொள்கின்றன. அதேநேரம் இவ்விழாவை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.
இந்த நிறைவு விழாவையையொட்டி, பாதுகாப்பு கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜனவரி 27-ல் ஏற்பட்ட `பாதுகாப்பு குறைபாடு’ சம்பவம் குறித்து குறிப்பிட்டு, ஜன.30-ல் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
தனது அக்கடிதத்தில் அவர் “ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவில் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். எனவே இந்த விழாவின் பாதுகாப்பு விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை உட்பட விழா முடிவடையும் வரை உரிய பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM