ரோம்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளன.
எனினும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மரணச் சுழல்கள் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் சிறிய நம்பிக்கையைக் கொன்றுவிடவில்லை என நம்புகிறேன். இரண்டு நாட்டு அரசுகளும் நேரத்தை வீணடிக்காமல் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தையில் ஈடுபமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கு வன்முறை வெடித்தது. இதில் இஸ்ரேல் நடத்திய தாக்குதில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர். இதன் காரணமாக ஜெருசலேம் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.
இஸ்ரேல் படைகள், இந்த மாதம் நடத்திய தாக்குதலில் மட்டும் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.