சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மற்றும் திருவாரூரில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார். ஆனால், அதையேற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29-ம் தேதி அல்லது வேறொரு தேதியில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.