தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி (NDA)சார்பில் பாராளுமன்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று நடைறும் கூட்டத்திற்கு, அ.தி.மு.க சார்பில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அதிமுக மக்களவைக் குழு தலைவர் என்று ஓ.பி.ரவீந்திரநாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தொடர்ந்து இரு தரப்பையும் குழப்பும் விதமாகவே அமைந்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில்
எடப்பாடி பழனிசாமி
அனுப்பிய கட்சியின் வரவு செலவு விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றியது. இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அடுத்த ஓரிரு வாரத்தில் ரிமோட் வாக்குப் பதிவு தொடர்பான கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அந்த கடிதத்தை திருப்பி அனுப்பி அந்த பதவிகளில் யாரும் இல்லை என தெரிவித்தது. மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப சர்ச்சை கிளம்பியது. தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லையா என்றும் கேள்விகள் எழுந்தன.
ஜி 20 மாநாடு தொடர்பாக முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்த மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தத்து. எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் கலந்து கொண்டு வந்தார். இதனால் மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கிறது என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது மத்திய அமைச்சர் அதிமுக மக்களவைக்குழு தலைவர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டதாகவும், அவரை அதிமுக உறுப்பினராக ஏற்க கூடாது என்றும் மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசு அதிமுக மக்களவைக்குழு தலைவர் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேர்தல் ஆணையம் மூன்று நாள்களில் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த கடிதம் கவனம் பெற்று வருகிறது.