புதுச்சேரி: எதிர்கால தலைமுறையினர் பிரச்சினைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்வு காண்பது அவசியம் என ஜி20 மாநாட்டில் அறிவியல் 20 தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஜி20 அறிவியல் 20 ஆரம்ப நிலை கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார். இந்நிகழ்வை அறிவியல் 20 இந்திய தலைமை பொறுப்பு பேராசிரியர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்து பேசியது: “உலகளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் மதிக்கும் பல நாட்டு விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமைக்குரியது. அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை.
சமூக சீர்திருத்தங்களுக்கும் அறவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியல்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைத்து அமைதியை முன்னெடுக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்று உலகின் எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. பலதரப்பு ஒத்துழைப்பு, நட்புறவுடன் புத்தாக்கங்களை உலகளவில் முன்னெடுக்க நாம் கூடியுள்ளோம். நமது எதிர்காலம் குறித்து விவாதிக்க உள்ளோம். இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சி வசதிகளை பெற்று வளர்கிறது. இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கிறது.
பிறக்கும் குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறக்கின்றன. எதிர்கால தலைமுறைக்கு பல பிரச்சினைகள் உள்ளது. நமது வீடுகள், வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்படுகிறது. பெருமளவு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் காண வேண்டும்.
இங்கு நடைபெறும் கூட்டம் இனி நடைபெறும் கூட்டங்களுக்கு கருத்து வரைவை உருவாக்கும். அறிவியல் உச்சநிலை கூட்டம் கோவையில் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பல அமர்வுகளாக கருத்தரங்குகள் நடந்து வருகிறது. இக்கூட்டத்தினுள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரங்கு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.