தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு அவ்வப்போது தனக்கு ஏற்ற கதையில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான மண்டேலா மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் பொம்மை நாயகி படத்தில் நடித்திருக்கிறார். பொம்மை நாயகி பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் யோகிபாபு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையேறிய யோகிபாபு, ” எனக்கு பன்னி மூஞ்சி வாயன் முதல் பல உருவ கேலிகள் நடந்திருக்கு. எல்லோருக்கும் நடக்கும் உருவ கேலி எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்திருக்கு. ஆனால், என்னுடைய முகத்தில் என்னமோ இருக்கிறது என மாரி செல்வராஜ் கூறுவார். பா.ரஞ்சித்தின் ‘அட்டைக்கத்தி’ படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. அப்போது பல படங்களில் கமிட்டானதால் கால்ஷீட் இல்லை. இப்போது ரஞ்சித்தின் தயாரிப்பில் நடித்திருக்கிறேன். இதற்கு காரணம் மாரி செல்வராஜ் தான்.
பொம்மை நாயகி படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ண விடவில்லை. கதை அதற்கு அனுமதிக்கவில்லை. எனக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. ஒரு அப்பாவுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது இப்போது தான் புரிகிறது. பொம்மை நாயகி படத்திலும் அதனை உணரலாம். படத்தை பார்த்த படக்குழுவினர் என்னை ஒரு உணர்வுப்பூர்மான நடிகர் என கூறினர். இது எல்லாமே இயக்குநர் கையில் தான் இருக்கிறது. எல்லா மேடைகளிலும் நான் கூறுவேன்.. நான் காமெடியன் தான். பட வாய்ப்புக்காக ரோடு ரோடாக அலைந்திருக்கிறேன். என்னை வைத்து படம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக வாருங்கள்.. படம் பண்ணலாம்” என உருக்கமாக பேசினார்.