பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவின் தார்வாடில் தேசிய தடய அறிவியல் மையத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் திறந்து வைத்து, குந்துகோலில் நடைபெற்ற பாஜக பேரணியில் பங்கேற்றார்.
அங்கு அமித் ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் இளைஞர்கள், விவசாயிகள், பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை வழங்கி வருகிறார்.
ஆனால் காங்கிரஸூம், மதசார்பற்ற ஜனதா தளமும் ஊழல் ஆட்சியை புரிந்திருக்கின்றன. பாஜகவில் யாரும் குடும்பத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்யவில்லை. ஆனால் காங்கிரஸார் காந்தி குடும்பத்தினருக்கும், மஜதவினர் தேவகவுடா குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆரத்தி எடுத்து கொண்டிருக்கின்றனர். அந்த கட்சிகள் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. காங்கிரஸூம், மஜதவும் வாரிசு அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
தேவகவுடா குடும்பத்தின் 2 மகன்கள், 2 மருமகள்கள், பேரன்கள் என 10க்கும் மேற்பட்டோர் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தினர். அதனால் எல்லா பலனும் அவர்களின் குடும்பத்துக்கே கிடைத்தது. இதனால் மக்கள் கோபமடைந்ததாலே தேவகவுடா குடும்பம் தேர்தலில் தோல்வி அடைந்தது. வருகிற தேர்தலில் வாரிசு அரசியலை முன்னெடுக்கும் காங்கிரஸூம் மஜதவும் நிச்சயம் தோல்வி அடையும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.