காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடற்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழமுக்கம் குறித்து இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கிழக்கு திசை நோக்கி நகரும் தாழமுக்கம்
இதன்படி, திருகோணமலை, பொத்துவில் மற்றும் காங்கேசன்துறை ஊடாக செல்லும் கடற்பிராந்தியங்களில் இன்று மாலை 6 மணி முதல் கடற்தொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் நாளைய தினம் கிழக்கு திசை நோக்கி நகரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் நாட்டில் உள்ள கடற்பிராந்தியங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை முதல் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.