காஷ்மீர்: காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். செப்டம்பர் 7ல் குமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று ஜம்மு மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. ஸ்ரீநகரில் பனிமழைக்கிடையே இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, காஷ்மீருக்கு வாகனத்தில் செல்லுங்கள், கால்நடையாக செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
நான் கால் நடையாக காஷ்மீரில் நடைபயணம் சென்றால் என் மீது கையெறி குண்டு வீசப்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். எனது முன்னேற்றத்திற்காகவோ அல்லது காங்கிரஸின் நலனுக்காகவோ நான் பயணம் மேற்கொள்ளவில்லை. என்னை வெறுப்பவர்களுக்கு, எனது வெள்ளை சட்டையின் நிறத்தை சிவப்பு நிறமாக மாற்ற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். என் குடும்பம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. காந்திஜி எனக்கு பயமின்றி வாழக் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே நடந்தது. ஜம்மு காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை வழங்கவில்லை, அன்பை மட்டுமே கொடுத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறினார்.