பத்தாம் வகுப்பு மாணவி குளிக்கும் போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பீஹார் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இப்படிப்பட்ட தீர்ப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.
பீஹாரில் இருந்து வேலை தேடி, மகளுடன் சென்னை வந்த தாய், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர்.
துக்க நிகழ்வுக்காக பீஹார் செல்ல வேண்டியிருந்ததால், பத்தாம் வகுப்பு மாணவியான தனது மகளை, பீஹாரைச் சேர்ந்த தனக்கு தெரிந்தவர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் அந்த தாய்.
அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த பீஹாரைச் சேர்ந்த ராகுல் குமார் என்பவர், மாணவி குளிக்கும் போது மறைந்திருந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதை மாணவியிடம் காட்டி, பணம் நகைகளை பறித்துக் கொண்டதுடன், மாணவியை கிழக்கு கடற்கரைச் சாலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின், தாயுடன் பீஹார் திரும்பிய நிலையில், மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல சட்டங்கள் அமைக்கப்பட்டாலும் பல தண்டனைகள் வழங்கப்பட்டாலும் இவை கட்டுப்படுவதாகத் தெரியவில்லை.
இதற்கு யார் காரணம்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?
இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா?
பெண்ணே…. விடைகள் கண்டறியப்படும், தீர்வுகள் கூட பிறக்கலாம். ஆனால், அது வரை நீதான் உன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீ பச்சிளங்குழந்தையோ, பொக்கைப் பல் பாட்டியோ, சீரழிக்க நினைப்பவனுக்கு, நீ ஒரு உடல் மட்டுமே. ஆகையால், உன்னை நீதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது கயவர்கள் உலா வரும் உலகம், கண்ணியத்தை எதிர்பார்க்காதே. இது மனித உருவில் மிருகங்கள் அலையும் உலகம், மயங்கி விடாதே. இது, நண்பன் என்ற போர்வையில் நரிகள் நடமாடும் உலகம். நட்பின் போர்வையில் நெருங்கினாலும் நம்பி விடாதே.