குழந்தை பருவத்திலிருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் சிலம்பரசன். இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குகிறார். இருப்பினும் இவருக்கு இடையில் சில காலங்களாக படங்கள் அவ்வளவாக ஓடவில்லை, மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் விதமாக இவருக்கு ‘மாநாடு’ படம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ‘மாநாடு’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களில் ‘மாநாடு‘ படமும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்புவை தேடி பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. இதனை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் சிம்புவிற்கு பாராட்டை பெற்று தந்ததோடு அவருக்கு கூடுதல் புகழை சேர்த்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவின் மற்றொரு படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படம் இந்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படி சிம்பு படங்களில் பிசியாக இருந்துவரும் நிலையில், தங்கள் நடிகரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பு பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் சிம்பு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் தயாரிக்கும் ‘கொரோனா குமார்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இந்த படம் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்த ‘கொரோனா குமார்’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாகவும், இந்த படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக படத்தில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதன் கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறிவிட்டார், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.